இப்படியும் நடக்கிறது
முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை துறந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த செய்திதான் இப்போது பேசுபொருளாகியிருக்கின்றது,
ஒவ்வொருவரும் தத்தமக்கு புரிந்தவாறு அல்லது தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு நீதிவானே இந்த நாட்டில் வாழமுடியாத நிலை இருக்கின்றது என்று கூட சிலர் எழுது கின்றனர்.
தியாகி திலீபனின் நினைவு தினத்தையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஊர்தி மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்திய செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாகியிருந்த போது, இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருக்கின்ற விஜய தாஸ ராஜபக்ஷவு. ‘நினைவேந்தலை தடுக்க யாருக்கும் உரிமை யில்லை. இந்த நாட்டில் யாரும் எவரையும் நினைவுகூரலாம்” என்று அறிவித்திருந்தார்.
ஆனால், பொலிஸாரோ திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டு நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்கிறார்கள். இது ஒன்றே போதும் இந்த நாட்டின் இலட்சணத்தை சொல்வதற்கு,
குருந்தூர் மலை விவகாரத்தில் தனக்கு முன்னால் வந்த வழக்கு ஒன்றில் நீதிபதி சரவண ராஜா வழங்கிய தீர்ப்பை பேரின வாதிகளோ அல்லது அந்த இடந்தில் விகாரையை கட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த விகார அதிபதியான பௌத்த மதகுருவோ கண்டுகொள்ளவில்லை.
நீதிமன்ற உத்தரவை மீறி விகாரையை கட்டியவர்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காத போதே இந்த நாட்டின் நீதித் துறை ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.
தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டதாகவும் புலனாய்வாளர்கள் தொடர்ந்து தன்னை கண்காணித்து வந்தனர் என்றும் பதவி விலகிய நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
அவரில் உயிருக்கு அசாறுத்தல் இருந்திருக்கும் என்பதிலோ அல்லது இத்தகைய அழுத்தங்களால் அவர் மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதிலோ யாருக்கும் எத்த கருத்து வேறுபாடும் இருக்காது.
ஆனால், இந்த சம்பவம்தான் இலங்கையின் நீதித்துறை எவ்வளவு ஆபத்தில் இருக்கின்றது என்பதை பறைசாற்றுகின்ற ஒன்று என்பதுதான் வேடிக்கையானது.
தமிழர்கள் அவர் – நீதிபதியாக இருந்தாலும் கூட அவர் தமிழராகவே பேரினவாதிகளால் பார்க்கப்படுகிறார் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுபோன்ற வழக்குகளில் அரசுக்கும் அதிகம் ஏன் இராணுவத்துக்கு எதிராகவும் தீர்ப்பு சொன்ன தமிழ் நீதிபதிகளும் இன்றும் சுடமையில் இருக்கிறார்கன்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கில் இராணுவத்துக்கு எதிராக தீர்ப்பு
சொன்னவர் நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் , அவர் தீர்ப்பு சொன்ன காலம் நமது மண் எத்தகைய அச்சுறுத்தல் நிலை இருந்தது என்பதும் நமக்கு தெரியாததல்ல.
கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டப்படுவதற்கு எதிராக மட்டுமன்றி மேலும் பல விகாரைகள் தொடர்பான வழக்குகளிலும் இளஞ்செழியன் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.
அவருக்கு அப்போது உயிராபத்து இருக்காமல் இருந்திருக்காது. ஆனாலும் இன்றும் ஒரு நீதிபதியாக தொடர்கின்றார்.
நாளை குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும் அவர் ஒரு நீதிபதியாகவே தீர்ப்பு சொல்லியிருப்பார்.
அதற்காக முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்த பின்னரே இலங்கையின் நீதித்துறை கறைபடிந்து விட்டது என்று கூறுவதை கேட்கின்ற போதுதான் , அவ்வாறு சொல்பவர்கள் இலங்கையின் நீதித்துறை மீது இதுவரை மதிப்பு வைத்திருந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
லண்டனில் அந்த நண்பர். அங்கு புதிதாக அகதிகளாக போய்ச் சேருபவர்களுக்கு அகதி விண்ணப்பங்கள் கையாள்வதைப் பிரதானமாக கொண்ட ஒரு சொலிசிற்றர்.
அவருடன் நேற்று பேசிக் கொண்டிருந்த போது அவர் குரலில் ஒருவகை சந்தோசம் தெரிந்தது. அதளைப் புரிந்துகொள்ள இந்த ஊர்க்குருவியால் முடியாதா என்ன?
“என்ன இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோசம்தானே. ஒரு நீதிபதியே இந்த நாட்டில் வாழ முடியாதபோது சாதாரண மக்கள் எப்படி வாழமுடியும் என்றே கேஸ் எழுதி வென்றுவிடலாமே?’ என்றேன். சிரித்துக்கொண்டே சொன்னார்,
‘உண்மைதான் , இனி பக்கம் பக்கமாக பொய்களை எழுத வேண்டியதில்லைத்தான்…’
இந்த ஊர்க்குருவியின் கவலை எல்லாம் நீதிபதி பதவி விலகி இந்த அரசுக்கு பாடம் கற்பித்தது பாராட்டுக்குரியது தான்.
ஆனால், அவர் பதவி விலகிவிட்டு இந்த நாட்டில் இருந்து தான் செய்ததில் – அதாவது தனது தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை என்று நின்று நிரூபித்து – அதற்காக போரடியிருக்கவேண்டும் என்பதே
அவர் மீது, அவரின் தீர்ப்பின்மீது இனி அரச தரப்பு தவறுகளை கண்டுபிடித்து அதனை தமது பக்க நியாயமாக முன்வைத்தால் அதற்கு எதிராக வாதிடுவதற்கு அவர் இல்லாமல் போய்விடுவார் என்பதுதான் இந்த ஊர்க்குருவியின் கவலை.
ஏனெனில் அவர் மீது, அவரது தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தி இரண்டு வழக்குகளை மேன்முறையீட்டு நீதிமன்றில் சிங்கள பேரினவாதிகள் தாக்கல் செய்திருக்கின்றனர்.
– ஊர்க்குருவி.