இளம் தாய் துஷ்பிரயோகம் – மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சி

பூகொடை – பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த போது தன்னை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் தாய் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த தனது குழந்தையை பறித்து தரையில் அடித்து கொலை செய்வோம் என மிரட்டி தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here