ஒரு வாரத்துக்கு முன்னர் தனது காரை விற்றார்? மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்ததாகவும் தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா இந்த கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்கு அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் ஒரு நீதிபதியாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சரவணராஜாவுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்திருந்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும் விஜேயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

சரவணராஜாவின் கொழும்புக்கான பயணத்தின் போது அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:-

குருந்தூர் மலை விவகாரம்!! உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல், நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி

அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்! – தமிழ் அரசுக் கட்சி அழைப்பு.

4 ஆம் திகதி மனித சங்கிலி போராட்டமாம்!! யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானம்

நீதிபதியின் பதவி விலகல்.. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here