பாணந்துறை பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த வாய் பேச முடியாத சிறுமியொருவர் தாயின் இரண்டாவது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பாணந்துறை பகுதியில் ஆரம்ப பாடசாலையின் விசேட பிரிவில் கல்வி பயிலும் பல்பொல பகுதியைச் சேர்ந்த ரோஷினி கவிஷ்க பெரேரா என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை இராணுவ சிறப்புப் படையின் சிப்பாய் எனவும் தாயும் சிறுமியும் சில வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாயார், சிறுமியின் வாழ்வாதாரத்திற்காக யாசகம் எடுத்து வந்ததாகவும், அவர் கடையொன்றில் வேலைக்குச் சென்ற போது சந்தேகநபருடன் நட்பாக பழகியதாகவும் பெண்ணின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் சிறுமியின் தாயையும், சிறுமியையும் சந்தேகநபர் தனது தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதுடன், அன்றைய தினம் முதல் சிறுமி கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் தாக்குதலால் சிறுமி பல நாட்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தாய் முயற்சி எடுக்கவில்லை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், (7) காலை முதல் சிறுமி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வீட்டின் அறையொன்றில் தரையில் பாயில் வைத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி உயிரிழந்த பின்னர் வீட்டை விட்டு ஓடிய சந்தேகநபர் இடையில் மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன, ஹிரண பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, பொலிஸ் பரிசோதகர் சமீர டி சில்வா, குற்றப் பிரிவின் நிலையத் தளபதி, பொலிஸ் பரிசோதகர் டி. மல்லிகராச்சி, பொலிஸ் சார்ஜன்ட் 3081 எதிரிசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மற்றும் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.