கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , பனிப்புலத்தில் தாக்குலை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் , இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்த இருவர் , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்ட பின்னர் , காரினையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று இருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சங்கானை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தானும் பனிப்புலம் பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனுமாக இணைந்தே தாக்குதல் மேற்கொண்டோம். குறித்த நபர் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணம் எமக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தினை பெற்றுக்கொண்டே தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட நபருடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை வெளிநாடுகளில் வாழும் ஒரு சில தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது எதிரிகளைப் பழிவாங்குவதற்கு பணத்தைக் கொட்டி காவாலிகளை கூலிக்கு அமர்த்தி எதிரிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவது அதிகரித்து வருகின்றது.