கனடா அனுப்புவதாகக் கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரை காத்தான்குடியில் இருந்து தூக்கி வந்துள்ளனர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார்.
இந்த நபரிடம் பளையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஏமாந்துள்ளார். சந்தேகநபரிடன் வங்கிக் கணக்குக்கு 10 லட்சம் ரூபா வைப்பிலிட்ட நிலையில், கனடா அனுப்பாது அந்த நபர் ஏமாற்றியுள்ளார்.
கனடாவுக்கு அனுப்புவது தொடர்பான பேஸ்புக் விளம்பரம் ஒன்றின் ஊடாகவே சந்தேகநபர் அறிமுகமாகியுள்ளார். அவர் கனடா அனுப்பாது தொடர்ந்தும் ஏமாற்றியதால் பணத்தை வைப்பிலிட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடட குற்ற விசாரணைப் பிரிவினருக்குப் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது.
57 வயதான சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுத் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக கனடா அனுப்புவதாகக் கூறிப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் பல லட்சம் ரூபாவை இவ்வாறு இழந்துள்ளனர்.