கல்வியியலாளர் கலாமணி மறைவு.!

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட  விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார்.

அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும் இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியானார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளரானார். மேலும் உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றி இருந்தார்.

 கலை இலக்கிய துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை  தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவரின் ஒரு மகனான பரணிதரன் கடந்த சில ஆண்டுகளாக ஜீவநதி எனும்  இலக்கிய மாத சஞ்சிகையினை வெளியிட்டு வருகிறார்.

கலாமணி அவர்களது தந்தையர் தம்பியஐயா புகழ் பூத்த அண்ணாவியாராவார். கடந்த சில வருடங்களாக  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென நேற்று(10) காலை காலமானார் அவரது இறுதிக்கிரியைகள் நேற்று(10) மாலை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.