கைவிட்ட குழந்தையையும், காதலியையும் ஏற்கத்தயார்: காதலனான பல்கலைக்கழக மாணவன் தகவல்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் என தெரியவந்துள்ளது.

கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் வைத்து 25 வயதுடைய நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், காதலி வீட்டிற்கு செல்ல விரும்புவதாக கூறியதால் குழந்தையை ரயிலில் விட்டு சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தெஹிவளை பகுதியில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய பல்கலைக்கழக மாணவர் இணையத்தில் பணிபுரிந்து வருவதும், குழந்தை வைக்கப்பட்டிருந்த கூடை ஒன்லைனில் ஓர்டர் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தையையும் காதலியையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணம் ஆகாததால் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியவில்லையென்றும், ரயிலில் வைத்தால் யாராவது எடுத்துச் சென்று குழந்தையை பத்திரமாக வளர்ப்பார்கள் என நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்

சிசுவின் தாயாரான 25 வயது யுவதியும் இதையே தெரிவித்துள்ளார்

நேற்று (10) அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு நோக்கிப் புறப்படவிருந்த புகையிரதத்தின் மலசலகூடத்தில் சிசுவை விடப்பட்ட போது பயணி ஒருவர் சிசுவைக் கண்டு புகையிரத அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அதன்பிறகு குழந்தையின் பொலிசார் விசாரணை நடத்தி, பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையை ரயில் கழிவறையில் தந்தையே விட்டுச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காதலியிடமிருந்து இளைஞன் குழந்தையை பெற்றுக்கொண்டு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தின் கழிவறையில் வைத்து விட்டு கொஸ்லந்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, கொழும்புக்கு அழைத்து வந்து தெஹிவளை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் கர்ப்பிணி காதலிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

தம்பதியினர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புகையிரத மலசலகூடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசு நேற்று மதியம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, பின்னர் பொது விடுதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.