இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அழைக்கிறார் என குறிப்பிட்டு, நோயாளியை பரிசோதித்து முடிக்காமல் இடைநடுவில் வெளியேறிச் சென்றார் என கிளிநொச்சியிலுள்ள தனியார் வைத்திய நிலைய வைத்தியர் ஒருவர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி கிளை அலுவலத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
நேற்று (13) இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டு, இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கராயன்குளத்தை சேர்ந்த ஒருவர் நோய் வாய்ப்பட்ட தனது தாயாரை அழைத்துக் கொண்டு, நீண்ட தூரம் பயணித்து கிளிநொச்சி வந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்
கிளிநொச்சியிலுள்ள தனியார் வைத்திய நிலையமொன்றிற்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்ற போது, 5 நிமிடம் வரை தாயாரை பரிசோதித்து சில விடயங்களை சிட்டையில் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, மன்னிக்கவும் என கூறியபடி வந்த ஒருவர், சிறிதரன் எம்.பி கூட்டமொன்றிற்கு வருமாறு அழைத்ததாகவும், தாயாரை பரிசோதித்து இடைநடுவில் விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கேள்வியெழுப்பிய போது, தன்னுடன் தரக்குறைவாக பேசியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.