யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை சம்பவத்தில் வைத்தியசாலை தாதி ஒருவருக்கு யாழ். நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா ஊடாக தவறாக முறையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவமனைகளில் மருத்துவத் தவறுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தபோதும், விசாரணை அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் தாதி ஒருவருக்குப் பயணத் தடை விதித்துள்ளதுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அத்துடன் விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளதுடன், அதற்கான சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
உண்மையில் சிறுமிக்கு கனுலா போட்டது ஒரு ஆண் தாதி என்றும் இரவு கடமையில் நின்ற குறித்த தாதி சேலையின் ஓடு கலந்து போடும் மருந்தை நேரடியாக செலுத்தியுள்ளதாகவும் இதனாலே குறித்த கனுலா போடப்பட்ட நாளம் சிதைவடைந்து ஊசி மருந்து வெளியேறி குருதி ஓட்டத்தை தடை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது
இந்நிலையில் உடனடியாக மேலதிக சிகிச்சைகள் செய்திருந்தால் கையை அகற்ற வேண்டி ஏற்பட்டிருக்காது என்றும் குறைந்தது கை முற்றாக குருதி ஓட்டம் தடைபட்டிருக்க எப்படியும் 5 – 6 மணித்தியாலங்கள் எடுத்திருக்கும் என்றும் ஏற்கனவே பார்வையிட்ட வைத்தியர்கள் நினைத்திருந்தால் உடனடியாக தனக்கு அறிவித்து தன்னால் கையை காப்பாற்றி இருக்க முடியும் என்றும் பெயரை குறிப்பிட விரும்பாத வைத்திய நிபுணர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
எப்படி பார்கினும் இங்கே அலட்சியம் என்று சொல்லாவிடினும் அறியாமை என்பதே தெளிவாகின்றது எனவும் இதுபோல சம்பவங்கள் மிக அரிதாகவே இடம்பெறுவதாகவும் கடமையில் நின்ற இரு தாதியருடன் பின்னர் பார்வையிட்ட இரு வைத்தியர்களுக்கும் சரியான தெளிவூட்டல் வளங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்-
யாழ் வைத்தியசாலையில் தாதியர் காவலாளிகள் அடாவடி..!
யாழ்.போதனா வைத்தியசாலையால் கையை இழந்த சிறுமி; போராட்டத்தில் பதற்ற நிலை
சிறுமியின் கை அகற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் – மூடி மறைக்க முயற்சியா? வெடித்தது போராட்டம்
தாதியரின் அசண்டையீனமே காரணம்!! சிறுமியின் தாத்தா குற்றச்சாட்டு
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்!! நடந்தது என்ன?