சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என குற்றம்சாட்டப்பட்ட காவற்துறை உயர் அதிகாரிக்கு பிறிதொரு வழக்கில் சிறை!

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை நடத்திய கஹவத்தை காவற்துறையினரால் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதற்கு ஆயத்தமான வேளை, அவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதே, நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த நபர் வடமாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபராக கடமையில் இருந்த போது , புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here