பதுளை – ஹாலி எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையை கடக்க முயன்றபோது, நீரில் இழுத்துச்செல்லப்பட்ட இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் 7 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோர் வேலைக்கு சென்ற தனது தாயை தேடிச்சென்ற போது துரதிஷ்டவசமாக நீரில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல்போன நிலையில் இன்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளும் தினசரி கூலி வேலைக்கு செல்லும் தனது தாய் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராமையினால் கொட்டும் மழையில் வீட்டிலிருந்து வெளியேறி தாயை தேடி சென்றுள்ளனர்.
இதன்போது நீரோடையொன்றை கடக்க முற்பட்ட போது நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டனர். எனினும் இதனை அறியாத தாய் மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, தனது பிள்ளைகளை காணவில்லை என தேடியுள்ளதுடன், பிள்ளைகள் பயன்படுத்திய குடை, நீரோடைச் செல்லும் பாதைக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிள்ளைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏழு வயது சிறுமியின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு நீர்வழிப்பாதையில் மீட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று முற்பகல் சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.