திருமலையில் பஸ் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்றிரவு (01) CTB பஸ்ஸுடன் நபரொருவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் டிப்போவிற்கு சொந்தமான பஸ் உட்துறைமுக வீதிக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டவர் உடன் மோதியதாகவும், இதனை அடுத்து ஆவேசத்தில் சிலர் பஸ்ஸை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த விபத்தில் திருகோணமலை சீ.வீ.ரோட்- கஸ்தூரி நகரில் வசித்து வரும் கருப்பையா கருணாநிதி (வயது 43) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை விபத்தினையடுத்து பஸ்ஸை தாக்கிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.