திலீபனின் நினைவு ஊர்திமீது தாக்குதல் மேற்கொண்டோர் பிணையில் விடுதலை

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்று (21) மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு இன்று (21) காலை எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (21) காலை குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிராக இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் குறித்த வழக்கானது இன்று (21) மாலையளவில் நகர்த்தல் பிரேரணை மூலம்; எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் சமர்ப்பணத்தின்போது குறித்த நபர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதால் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இனக்கலவரங்கள் ஏற்படலாம் எனவும் அத்துடன் சாட்சிகள் வெளி மாவட்டங்களில் இருப்பதனால் சூம் தொழில்நுட்பம் மூலம் சாட்சிகளை பெற்றுக் கொள்வதாகவும் குறித்த நபர்களை பிணையில் விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தின் பின்னர் குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

17.09.2023 அன்று மாலை திருகோணமலை – கொழும்பு ஏ6 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியானது சர்தாபுர பகுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்தது.

இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதுடன் வாகனத்தில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 நபர்களும் தாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆறுபேரும் கைது செய்யப்பட்டு 18.09.2023 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here