20.09.2023 அன்று திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் வைத்து புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்பவர் வீதியால் நடந்து சென்றபோது திருமலையில் உள்ள பிரபல மலர்சாலையின் வாகனம் ஒன்றினால் மோதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் ஒருசில நிமிடங்களுக்குள் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் குறித்த நபரின் உடல் குறித்த மலர்சாலை வாகனத்தினால் ஏற்றிச் செல்லப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிண அறைக்கு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் இறந்த நபரின் உறவினர்கள் நீதிகோரி குறித்த மலர்சாலையின் உரிமையாளரிடம் சென்றபோது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை குறித்த சாரதியை நான் முதல்நாள் இரவே வேலையை விட்டு அனுப்பிவிட்டேன். வேண்டும் என்றால் நீங்கள் அவருக்கு எதிராக வழக்கு போடுங்கள் உங்களுக்கு நான் எதுவும் செய்யமாட்டேன் என உறவினர்களை துரத்தியுள்ளார்.
குறித்த விபத்து குறித்த மலர்சாலைக்குரிய வாகனத்தினாலேயே ஏற்படுத்தப்பட்டிருந்தது அதை ஏற்படுத்திய சாரதியும் குறித்த மலர்சாலையில் பணியாற்றும் சாரதியே அத்துடன் அவர் சடலம் ஒன்றை திரியாய் பகுதியில் இறக்கிவிட்டு 60000 ரூபா பணத்தோடு வேகமாக வரும்போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றால் விபத்து இடம்பெற்ற பகுதிகள் அடையாளமிடப்படுவதோடு தேவையான புகைப்படங்களும் பொலிசாரினால் பெற்றுக் கொள்ளப்படும். எனினும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் இந்த கொலைச் சம்பவத்தில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் ஏழைக்கு நீதி மறுக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
தற்போது சாரதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிக்கு விலைபேசப்படுகின்றதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
எது எவ்வாறாயினும் கொலை செய்யப்பட்டவருக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும்.