நண்பர்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிய 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

வயங்கொடை – மாலிகதென்ன பிரதேசத்தில் நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச்சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயங்கொடை – மாலிகதென்ன பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான மல்ஷானி விக்ரமரத்ன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கிரிக்கெட் விளையாடப்போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மேலும் 08 இளைஞர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.

ஏனைய இளைஞர்கள் நீந்துவதற்காக நீரில் குதித்ததாகவும், பின்னர் குறித்த இளைஞன் தனக்கும் நீந்தத்தெரியும் என தனது சக நண்பர்களிடம் கூறிவிட்டு நீரில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நீரில் மூழ்கிய இளைஞன் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.