பயணப் பையொன்றினுள் சந்தேகத்திற்கிடமான அடையாளம் தெரியாத சடலமொன்றை சீதுவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லான வத்தை கிந்திகொட பிரதேசத்தில் உள்ள தண்டுகங்ஓய கரையில் இனந்தெரியாத சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக சீதுவை பொலிஸ் 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த செய்திக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இறந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 5 அடி 8 அங்குல உயரம், சாதாரண உடல், சுமார் 2 அங்குல நீளம் கொண்ட முடி, சிவப்பு ரீ-சேர்ட் மற்றும் கபில நிற நீண்ட காற்சட்டை அணிந்துள்ளார்.
இறந்தவரின் கழுத்தின் வலது பக்கத்தில், 7 நட்சத்திரங்கள் கொண்ட பச்சை குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தலையின் இருபுறமும் மற்றும் தாடையில் காயத்தின் அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீல நிற பயணப் பையொன்றில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபர் என தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்