பாடசாலை மாணவியை பல தடவை வன்புணர்ந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆசிரியர் ஒருவருக்கு (எம். வைத்தியநாதன்) நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் இன்று, 17 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

HCR/58/2019 வழக்கு இலக்கம் கொண்ட கொட்டகலை பகுதியை சேர்ந்த (43) வயதுடைய பாடசாலை ஆசிரியர், பாடசாலை மாணவி ஒருவரை மூன்று தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு – குற்றவாளியாக கருதப்பட்ட ஆசிரியருக்கு 17 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதவான் விராஜ் வீரசூரிய, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து லட்சம் ரூபா நஷ்டஈடு தொகை வழங்க வேண்டுமெனவும், இதை செலுத்தாவிட்டால் மேலும் மூன்றரை வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.