சிலாபத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பிக்கு ஒருவரை தாக்கிய சிலாபம், உட்லண்ட் வத்த பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி சிலாபம் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு குறித்த நபர் சென்று பொருட்களை கொள்வனவு செய்த போது, தனது கையடக்க தொலைபேசியில் காட்சிகள் சிலவற்றை பதிவு செய்ய முயன்றுள்ளார்.
அதற்கு அங்கிருந்த பிக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது, குறித்த நபர் அவரைத் தாக்கி, பிக்குவின் பையில் இருந்த 12,000 யூரோக்கள் உள்ளிட்ட 48 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர், இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, போலியான இராணுவ பயிற்சி சான்றிதழ், இராணுவத்தினர் பயன்படுத்திய சில ஆடைகள் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.