முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் போதை ஊசி வியாபாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
பாடசாலை, ஆலயசூழல்களில் இவ்வாறான பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள் பிரதேச மக்களால் இனம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கைவேலி பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் மலசலகூடத்திலும் அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் பகுதிகளிலம் போதைக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவான ஊசிகள் மக்களால் இனம் காணப்பட்டுள்ளதுடன் இந்த போதை வியாபாரம் செய்பவர்கள் தொடர்பிலும் கிராம அமைப்பினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எழுதுத்துமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் செய்பவரினை கைவேலி தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இனம் கண்டு போதைப்பொருள் வியாபாரத்தினை நிறுத்தகோரி கடிதம் அனுப்பிவைத்துள்ளார்கள்.
கைவேலிப் பகுதியில் இடம்பெறும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தினால் பாடசாலை மாணவர்கள், இளம் சமூதாயத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்ச்சியாக பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு வந்தாலும் அவர்கள் எவ்வாறோ வெளியில் வந்து மீண்டும் மீண்டும் அந்த தொழிலை மேற்கொண்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் 06.03.2023 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினை அழைத்த கிராம அமைப்புக்கள் மற்றும் மக்கள் தங்களின் கிராமத்தினை போதையில் இருந்து மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கிராமத்தில் புதிதாக பொலீஸ் குழு ஒன்றினை தெரிவு செய்ய பதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹெராத் மக்களுக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து பொலீசாரின் முன்னிலையில் புதிய பொலீஸ் குழுவாக விசேட குழுஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட மாக போதைவியாபாரம் செய்வர்களுக்கு பொது அறிவிப்பினை விடுத்து அடுத்த கட்டமாக அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரதம் செய்பவர்களை கிராம அமைப்புக்கள் இதன்போது பொலீசாருக்கு இனம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.