புல்மோட்டையில் மக்கள் விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் பிக்கு ஒருவர் துப்பரவு செய்ததால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
புல்மோட்டை, வீரந்தீவு எனப்படுகின்ற பகுதியில் காலாகாலமாக மக்கள் விவசாயம் செய்துவந்த விவசாய காணிகள் அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பனாமுரே திலகவங்ஷ நாயக்க தேரோவினால் டோசர் இயந்திரங்களைக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (22) துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.
குறித்த காணி தமது விவசாய காணி என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அக்கானி பௌத்த விகாரைக்குரிய காணி என புத்த பிக்குவால் குறிப்பிடப்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது மக்கள் டோசர் இயந்திரத்தின்மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்தபோது இயந்திரத்தின் சாரதி டோசர் இயந்திரத்தை இயக்கியதால் பெண் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
சிலவருடகாலமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பூஜா பூமி எனும் பெயரில் தமிழ், முஸ்லீம் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
428 சதுர கிலேமீற்றர் பரப்புடைய குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் அண்ணளவாக 27957 முஸ்லீம் மக்களும், 13639 தமிழ் மக்களும், 981 சிங்கள மக்களும் வாழ்ந்து வருகின்ற நிலையில் இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட விகாரைகளுக்கான காணிகள் ஒதுக்கப்பட்டு கட்டுமானங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதைவிட மக்களுடைய பாரம்பரிய காணிகளும் பூஜா பூமி எனும் பெயரில் அத்துமீறி கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அத்துடன் விகாரை ஒன்றுக்கு 500 ஏக்கர் வீதம் 2013ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 6 விகாரைகளுக்கு 3000 ஏக்கர் காணிகளை வழங்குமாறு குறித்த விகாராதிபதியினால் 2018ம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதை வழங்குமாறு இன்றுவரை கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புல்மோட்டையில் விவசாயிகளுக்கு சொந்தமான காணிக்குள் அடாத்தாக புகுந்த பிக்கு அராஜகம்