பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை!

திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பினை இன்று (10) வழங்கியுள்ளது.

மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல்வெவ-புபுதுபுர பகுதியில் வசித்து வந்த 47 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபருக்கு ஏழு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 40வயதுடையவர் எனவும் தெரிய வருகின்றது.

இதேவேளை குறித்த குற்றவாளிக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும், அப்பணத்தை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 60 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதே நேரம் குறித்த பெண் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த பெண்ணின் பிள்ளைகளுக்கும் சரிசமமாக குறித்த பணத்தை பங்கிடுமாறும், அப்பணத்தை செலுத்த தவறினால் ஆறு மாதம் சாதாரண சிறை தண்டனை வழங்குமாறு ம் திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கு ம், சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு 5000 ரூபாய் பணத்தை செலுத்துமாறும் செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத கால சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.