மனைவியுடன் பயணித்த 24 வயது இளைஞனை கடத்திச் சென்று வெட்டிக் கொலை செய்த கும்பல்!! யாழ்.பொன்னாலையில் பயங்கரம்!

யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவியைக் கடத்திய கும்பல் ஒன்று கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவித்திரன் என்ற இளைஞரே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் பயணித்த பவித்திரனை இரு கார்களில் வந்தவர்கள் பொன்னாலையில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வழிமறித்துள்ளனர்.

கார்களில் வந்தவர்கள் வாள்களுடன் காணப்பட்ட நிலையில், பவித்தரனும் மனைவியும் அங்கிருந்த கடற்படைமுகாமுக்குள் அடைக்கலம் கோரியுள்ளனர். ஆனால் அங்கிருந்த கடற்படையினர் அவர்களை முகாமுக்குள் அனுமதிக்கவில்லை.

இரு கார்களில் வந்த கும்பல் பவித்திரனை ஒரு காரிலும், மனைவியை ஒரு காரிலும் வற்புறுத்தி ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றது.

அதன்பின்னர் பவித்திரன் வெட்டுக்காயங்களுடன் வட்டுக்கோட்டை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக போட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மனைவியுடன் பயணித்த 24 வயது இளைஞனை கடத்திச் சென்று வெட்டிக் கொலை செய்த கும்பல்!! யாழ்.பொன்னாலையில் பயங்கரம்! - Tamilwin News

வட்டுக்கோட்டை மருத்துவமனைப் பணியாளர்கள் பவித்திரனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆயினும் பவித்திரன் உயிரிழந்தார்.

மற்றொரு காரில் கடத்திச் செல்லப்பட்ட மனைவி அராலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

ஆயினும் அயலவர்கள் அந்தக் கும்பலுடன் முரண்பட்டதால், அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல் மனைவியை சித்தன்கேணிப் பகுதியில் வீதியில் விட்டுச் சென்றுள்ளது.

அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரும், யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.