மருத்துவ தவறுகள் தவிர்க்கப்பட வேண்டியவை!! வைரலாகும் தாதி ஒருவரின் பதிவு

மருத்துவத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பணியாற்றுகின்ற தாதியர்களில் அண்ணளவாக 70 வீதத்துக்கும் அதிகமானோர் தினமும் சராசரியாக 12 மணித்தியாலங்களுக்கும் மேலதிகமாக நிர்ப்பந்தம் காரணமாக மனவுளைச்சலுடன் சமுகத்தின் நலன் கருதி கடமை செய்து வருகின்றோம்.

கடமை நேரத்தோடு கடமை நேரத்தின் அளவிற்கு மேலாக மேலதிக நேரம் கடமையாற்றி வருகின்றோம்.

நான் கடமையாற்றிவருகின்ற வைத்தியசாலையில் தற்போது சேவையில் அனுமதிக்கப்பட்ட தாதியர்களின் எண்ணிக்கை (Approved cadre) 100 ஆகும். இந்த எண்ணிக்கையானது 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தேவை மதிப்பீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஆளணி ஆகும்.

2015 ஆம் ஆண்டுகளில் இவ்வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிக்கொண்டிருந்த வைத்தியர் அவர்கள் அக்காலப்பகுதியில் அப்போதுள்ள நிலைமைகளின்படி (2015 களில்) வைத்தியசாலை தேவைகளின் அடிப்படையில் ஆளணித்தேவை மதிப்பீடொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அதன் பிரகாரம் அப்போதுள்ள தேவை அடிப்படையில் வைத்தியசாலையினை வினைத்திறனாக செயலாற்றுவதற்கு 200 தாதியர்கள் தேவையென மதிப்பிட்டிருந்தார்.

ஆனால் அப்போது அனுமதிக்கப்பட்ட தாதியரின் அளவு 100, வைத்தியசாலையின் மொத்த தாதியர்களின் எண்ணிக்கை 40 ஆகும். அவர் தனது மதிப்பீட்டறிக்கையை அப்போதே சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இதற்கான அனுமதியினையும் கோரி நின்றார்.

துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இவ்வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதற்கு பின்னரும் தேவை மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய நிலைமையின் படி கிட்டத்தட்ட 300 க்கு மேற்பட்ட தாதியர்களின் சேவை இவ்வைத்தியசாலையில் தேவையாகவுள்ளது. எனினும் இன்றுவரை அனுமதிக்கப்பட்ட அளவு 100 ஆகவே இருப்பதுடன் தற்போதுள்ள தாதியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 ஆகவே உள்ளது.

ஆகவே ஒரு தாதி இரண்டுக்கு மேற்பட்ட தாதி செய்யவேண்டிய வேலையை செய்வதற்கு வலிந்து திணிக்கப்படுகிறார் என்பதே உண்மை.

வட பகுதியின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் இதே நிலைமைதான் காணப்படும் என நம்புகின்றேன். இதனால் மனவுளைச்சல் தானாகவே ஏற்படுத்தப்படுகிறது.

இம்மனவுளைச்சலானது சில வேளைகளில் தாதியின் கடமை நேரத்திலும் மனவெழுச்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடலாம். கடமையில் சோர்வை ஏற்படுத்தி விடலாம். அது மருத்துவ தவறாக பரிணமிக்கப்படலாம். இது இயற்கையான ஒரு யதார்த்த விடயம்.

ஒப்பீட்டளவில் நோக்கினால் தென்பகுதி வைத்தியசாலைகளில் இந்நிலைமை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இங்கே ஒரு நேர கடமையில் 3 தாதியர்கள் கடமையாற்றுகின்ற விடுதியில் அதேயளவு நோயாளிகளையும், கட்டில்களின் எண்ணிக்கையையும் கொண்ட தென்பகுதி விடுதி ஒன்றில் குறைந்தது 8 தாதியர்களாவது அந்நேரக்கடமையில் பணியில் இருப்பார்கள்.

இதன் காரணமாக அங்கு மருத்துவ தவறுகள் நிகழ்வதற்கான எண்ணிக்கையின் அளவும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஏனைய வளங்களும் இதுபோலவே காணப்படுகின்றன. இவை சரியான முறையில் பகிரப்பட வேண்டும்.

இது ஒரு சமுகம் சார்ந்த பிரச்சினையேயன்றி தனியே மருத்துவம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. இதற்கு சமுக மட்டத்தின் அனைத்து தரப்பினருமே குரல்கொடுக்க முன்வர வேண்டும். அதனூடாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இத்தவறுகள் தவிர்க்கப்படலாம்.

ஆளணிப்பற்றாக்குறை என்கின்ற இந்த அவலநிலை தொடர்ந்திருக்கும் வரையிலும் ஆங்காங்கே மருத்துவ தவறுகள் அளவுகளுக்கேற்ற வகையில் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான அபாயகரமான சந்தர்ப்பங்களும் நிறையவே தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பதையும் இச்சமுகம் அறிவுபூர்வமாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

அதற்காக மருத்துவத்தவறுகளை ஒருபோதும் நான் நியாயப்படுத்த முன்வரவில்லை. அது மனித தர்மமும் அல்ல. அது இப்பதிவின் நோக்கமும் அதுவன்று.

ஆளணிப்பற்றாக்குறையான இக்கட்டமைப்பு மாற்றம் எப்போது மாற்றியமைக்கப்படும் என்ற எனது நியாயமான அவாவானது எனது முதல் நியமனத்திலிருந்து தற்போது 10 வருடங்கள் தாண்டியும் பூர்த்தி செய்யப்படாமலே தொடர்ந்து ஏமாற்றமளிப்பது வருத்தமளிக்கின்றது.

இதற்காக முழுச் சமூகமும் சேர்ந்து ஒரு தீர்வைக்காண வேண்டியுள்ளது மிகவும் அத்தியாவசியமான தேவையாகின்றது.

நிலைமை இவ்வாறு சமுகத்தின் பொறுப்புக்கூறலில் பன்னெடுங்காலமாக தங்கியிருக்கும் பரிதாப நிலையே இன்றும் காணப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் மருத்துவ தவறுகள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் இதனை அறிவார்ந்தமாக சிந்திக்காமல் வெறும் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தமது சுய விளம்பரங்களுக்காகவும், பிரபல்யத்துக்காகவும் உண்மைத் தகவல்களை பகுத்தாய்வு செய்யாமல் ஊடக தர்மத்துக்கு முரணாகவும், சமுக நீதிக்கு எதிராகவும் சில ஊடகங்கள், சமுக ஊடகங்கள், அரைவேக்காட்டு சமுக வலைத்தள போராளிகள் புரட்சி எனும் பெயரில் தனி மனித உரிமையினை மறுத்து ஊடக ஒழுக்கமற்ற வகையில் தனிப்பட்ட சுகாதாரப் பணியாளின் உத்தியோக வாழ்வு மற்றும் குடும்ப வாழ்வு ஆகியவற்றை விமர்சித்து பொதுவெளியில் கேவலமான முறையில் நடந்து கொள்வது அருவருக்கத்தக்கதுடன் மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

தனி ஒரு சுகாதார பணியாளரை குறி வைத்து தாக்குவது என்பது ஏற்புடையதன்று.

மருத்துவம் என்பது ஒரு குழுவேலையாகும். இந்த Team work இன் system இல் எங்கோ தவறு நிகழ்ந்த காரணத்தாலேயே இவ் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம்.

இந்த system உடனடியாக சீர்செய்யப்பட்டு இன்னொரு மருத்துவத்தவறு நிகழாத வண்ணம் கண்காணிக்கப்படல் மிகவும் அவசியமாக்கப்படல் வேண்டும்.

இந்த மருத்துவத் தவறுக்கு குழுவிலுள்ள அனைவருமே பொறுப்புக்கூறுதலுக்கு உரியவர்களேயன்றி தனி ஒரு சுகாதாரப் பணியாளர் மட்டுமல்ல.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குடும்பத்துக்கும் நிச்சயமாக நியாயம் கிடைக்கப்பட வேண்டும். இதில் மாற்றேதுமில்லை. குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டவர் / தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இனிமேலும் இவ்வாறான மருத்துவத் தவறுகள் நிகழாமலிருப்பதற்கான பொறிமுறைகள் நிச்சயமாக வகுக்கப்பட்டு அவை முறையாக கண்காணிக்கப்படல் வேண்டும்.

இதனூடாக எதிர்காலத்தில் நோயாளர் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு மருத்துவத் தவறுகள் தவிர்க்கப்படல் வேண்டும். இதற்கான பொறுப்பினை ஒவ்வொரு மருத்துவப் பணியாளரும் எந்நேரமும் சிரமேற்கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் இம்மருத்துவத் தவறுகள் ஏன் ஏற்படுகின்றன? இத் தவறுகளுக்கான அடிப்படைகள் என்ன?

இதை தவிர்ப்பதற்கான தீர்வுகள் என்ன ? இதை செயற்படுத்துவதற்கான திட்டம் என்ன ?

இவ்வாறான உண்மைத்தன்மையுடனாக விடயங்களை எத்தனை புலனாய்வு ஊடகங்கள், சமுக ஊடகங்கள் சமூகப்பொறுப்புடன் முறையாக ஆய்வு செய்து சமுக வெளிச்சத்துக்குள் வெளிக்கொணர்ந்துள்ளன?

எவ்வாறான நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைகளை இவை முன்வைத்துள்ளன?

எவரையும் இலகுவில் குற்றம் சாட்ட எல்லோராலும் முடியும். ஆனால் குற்றம் நிகழாமல் தடுக்கும் பொறிமுறைகளை ஆய்வு ரீதியாக முன்வைப்பதற்கு எவரும் முன்னிற்பதில்லை.

ஒரு தந்தை என்ற வகையில் எனக்குள்ளும் தாங்க முடியாத வலி ஒன்று உள்ளத்துக்குள் நிச்சயமாக உழன்று கொண்டுதானிருக்கிறது.

இதேபோல பொதுவெளியில் கூறாது விட்டாலும் கூட ஒவ்வொரு மருத்துவப் பணியாளனிடமும் இந்தவலியும், குற்ற உணர்ச்சியும் நிச்சயமாக அவர்களின் ஆன்மாவைத் துளைத்துக்கொண்டுதான் இப்போதும் இருக்கிறது என்பதும் வெளிப்படை.

கையை அகற்ற வேண்டும் அல்லது தீமை விளைவிக்க வேண்டுமென கங்கணங் கட்டிக்கொண்டு எந்தவொரு சுகாதார பணியாளனும் கடமையாற்றுவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக கையை மீறி இத்தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. இவை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியவையே.

சமுகத்தின் பொறுப்புக்கூறலில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவத்தவறுகளுக்கான பிரதான காரணியான இந்த ஆளணிப்பற்றாக்குறை என்கின்ற கட்டமைப்பு மாற்றத்தை இந்த சமுக ஊடக போராளிகளும், சமுகப் புரட்சியாளர்களும், குறிப்பிட்ட ஊடகங்களும் சமுக நலன்கருதி எவ்வாறு சமுகப் பொறுப்புடன் இந்த கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்போகிறார்கள் என்பதை உங்களில் ஒருவனாக ஆவலுடன் மீண்டுமொருமுறை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இன்னொரு மருத்துவப் பணியாளரை பலிக்கடாவாக்கும்வரை.

ஆளையாள் குற்றஞ்சாட்டாது இன்னொரு மருத்துவத்தவறு நிகழாதவாறு சமுகத்தின் நலன் கருதி சமுகப் பொறுப்புடன் சமூகமாக சிந்திப்போம், சமூகமாக செயற்படுவோம்.

2 COMMENTS

 1. நீதி என்பது சகலருக்குமானது. நீதிக்கு முன் சகலரும் சமன் என்பதுதான் நீதியின் தத்துவம்.

  அதனால்தான் நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.

  அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?

  நீதியை வழங்குபவர் இவர், நமர், அவர், பிறர் என்று பார்க்கக்கூடாது. எதிரில் நிற்பது நம் பிள்ளையாயினும் தீர்ப்பு ஒன்றுதான் என்பதாக நீதியின் தீர்ப்பு அமைய வேண்டும்.

  கையில்லாமல் ஒருவன் வந்து நீதி கேட்டாலும் அவன் எதிரி வரும்வரை காத்திரு. ஏன் எனில் அவன் இரண்டு கையும் இல்லாமலும் வரலாம் என முன்னோர்கள் சொன்னார்கள்..

  ஏன் இதனை சொல்ல வந்தேன் என்றால் கடந்த ஒருவாரமாக எவ்வளவு செய்ய எலுமோ அவ்வளவு வைச்சு செய்துள்ளீர்கள் தாதியர்களை..

  100 க்கு 100% வீதமானவர்களில் ஒருவர் கூட நல்ல கருத்தை பதிவிடவில்லை.. அப்படியானால் வைத்தியசாலையிலிருந்து ஒருவர் கூட குணமாகி வீடு செல்லவில்லை.. தினம் தினம் இதுபோலத்தான் நடக்கிறது என்றே எண்ண தோண்றுகின்றது ..

  நன்றி கெட்ட மனிதரடா நான் அறிந்த உலகத்திலே..

  ஒரு தாதியாக என்னை நான் அர்ப்பணித்ததிற்கு உண்மையில் இன்று நான் வெட்கப்படுகின்றேன்..

  எந்த வித மருத்துவ அறிவும் இல்லாமல் உண்மையில் என்ன நடந்தது??

  எப்படி திசை திருப்ப படுகின்றது?

  ஒருவரை மட்டும் பந்தாடும் நோக்கம் என்ன??

  ஏன் இந்த தாமதம்??

  எதற்காக அவசர அவசரமாக மாற்ற பட்டடார்??

  வரும்போது என்ன நிலமை??

  வர முன் என்ன நிலமை??

  குருதி குழாயில் அடைப்பு என்றால் அதனை அடைத்த மருந்து என்ன?? அது எங்கே கொடுக்கப்பட்டது??

  நாடியில் இலகுவாக கனுலா போட முடியுமா?? போட்டாலும் இதயத்தில் இருந்து உதைப்புடன் வரும் குருதிக்கு எதிராக சேலைன் ஏறுமா??

  சாதாரண காய்ச்சல் என்றால் ஏன் அதி வீரிய மருந்து பரிந்துரைக்க பட்டது??

  12-14 வருடங்களாக குழந்தை மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இலகுவில் பிழை விடுவார்களா? இல்லை அனுபவம் இன்றி போகுமா??

  அன்றைய இரவு பணியில் இருந்தவர்களிற்க்கு என்ன நடந்தது??

  இன மொழி பாகுபாடு காண்பிக்க படுகின்றதா??

  இங்கே யார் பலிக்கடா ஆக்கப்படுகின்றார்கள்?? யார் காப்பாற்ற படுகின்றர்கள்??

  ஒருத்தன் ஆவது இதற்கு பதில் கூற முடியுமா??

  கொலை குற்றவாளி என்றாலும் போது வெளியில் அவரது புகைப்படத்தை பகிர கூடாது என சட்டங்கள் இருப்பது பலரிற்கு தெரியாது போலும்..

  நீதி கிடைக்கும் வரை போராடுங்கள். ஆனால் உண்மையான நீதி கிடைக்கும் வரை யாரையும் குற்றவாளி என்று முத்திரை குற்றாதீர்கள்..

  இங்கே தாதிக்கும் சிற்றுழியர்களிற்கும் இடையே வேறுபாடு தெரியாத பலர் இருப்பதை நான் சொல்ல வேண்டியதில்லை..

  என்னதான் பொய் சீவி சிங்காரிச்சு முதல்ல வெளியே வந்தாலும் உண்மையும் ஒருநாள் வெளியே வந்துதான் தீரும்..

 2. நீதி என்பது சகலருக்குமானது. நீதிக்கு முன் சகலரும் சமன் என்பதுதான் நீதியின் தத்துவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here