திருச்சி: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு ஆண் நண்பருடன் வந்திருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட4 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார்.
அப்போது அங்கு மது போதையில் வந்த 4 பேர், தங்களை போலீஸார் என்று கூறி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை மட்டும் தனியே அழைத்துச் சென்ற அவர்கள், காரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பி,முக்கொம்பு சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த காரில், ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார்(35), காவலர் சித்தார்த்(31), ரோந்து வாகனக்காவலர் சங்கர் ராஜபாண்டியன்(30), நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத்(30) ஆகியோர் இருந்தது தெரியவந்தது.
போலீஸார் அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே, அவர்கள் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.வருண் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், முக்கொம்பு சுற்றுலா தலத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 4 பேரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.
சஸ்பெண்ட் செய்து உத்தரவு: இதையடுத்து, தலைமறைவாக இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதும்ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி பகலவன் உத்தரவிட்டார்.