மூதூர் நீதிமன்றில் வழிப்பறியில் ஈடுபடும் சில வக்கீல்கள்

மூதூர் நீதிமன்றில் சில சட்டத்தரணிகள் ஏழை, எழிய மக்களை ஏமாற்றி வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வெருகல் பகுதியைச் சேர்ந்த க.திருநாவுக்கரசு மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் ஈச்சிலம்பற்று பொலிசாரினால் 28.08.2023 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர் அவர்கள் சார்பில் வாதாடுவதற்காக ரமணன் மற்றும் முகுந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தனர்

இவர்கள் இலவசமாக வாதாடுவதற்கும் முன்வந்திருந்தார்கள். இந்நிலையில் குறித்த வழக்கு 29.08.2023 அன்று இடம்பெற்றபோது சம்பந்தமே இல்லாத 4 சட்டத்தரணிகள் குறித்த இரு சட்டத்தரணிகளுடனும் முன்னிலையாகி இருந்தார்கள்.

இதன்போது நல்லெண்ண அடிப்படையில் இவர்களும் முன்னிலையாகுவதாக குறித்த இரு சட்டத்தரணிகளும் எண்ணியிருந்தார்கள். பின்னர் கைது செய்யப்பட்ட இரு நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டதும் அவர்களிடமும் அவர்களது உறவினர்களிடமும் சென்ற குறித்த 4 சட்டத்தரணிகளும் தாங்கள்தான் இவர்களுக்காக வாதாடி பிணை எடுத்துக் கொடுத்ததாகவும் 4000 தரவேண்டும் என கோரி அதனை வாங்கிக் கொண்டார்கள்.

அதேபோல் வெருகல் பகுதியைச் சேர்ந்த க.வீரபத்திரன், கா.கோகிலராஜா, சி.ஜெயாபரன், சி.ஸ்ரீதரன் ஆகிய மேலும் 4 பேருக்கான அதே வழக்கு நேற்று 01.09.2023 மூதூர் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதற்கும் ரமணன் மற்றும் முகுந்தன் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடியபோது குறித்த 4 சட்டத்தரணிகளும் தாமாகவே வந்து குறித்த இரு சட்டத்தரணிகளுடன் சேர்ந்து நின்றார்கள். பின்னர் குறித்த 4 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களிடமும் அவர்களது உறவினர்களிடமும் சென்று 8000 ரூபா வழங்குமாறு கேட்டுள்ளனர். நாங்கள் உங்களை அழைக்கவில்லையே எங்களிடம் பணம் இல்லை என்று கூற அவர்களை வற்புறுத்தி பணம் வழங்குமாறு அச்சுறுத்தியுள்ளார்கள் இதனால் அவர்கள் சிலரிடம் கடன்பட்டு அப்பணத்தை வழங்கியுள்ளார்கள்.

இந்த வழக்கு வெருகல் – நாதனோடையில் மணல் அகழ்வதற்கு எதிராக போராடியவர்கள்மீது ஈச்சிலம்பற்று பொலிசாரினால் பொய்யாக போடப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு சில வக்கீல்கள் வழிப்பறியில் ஈடுபடுவதற்கு இன்றைய பொருளாதார சூழ்நிலை காரணமா? அல்லது அதிகரித்துள்ள சட்டத்தரணிகள் காரணமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறித்த 4 சட்டத்தரணிகளது பெயர்களும் சில காரணங்களுக்காக தவிர்க்கப்படுகின்றது. எனவே இதுபோல் வேறு நபர்களிடம் வழிப்பறி செய்வதை இவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here