யாழில் வடிவேலு பாணியில் திருட்டு: ஓடிப்பார்ப்பதாக கூறி கடத்தப்பட்ட வாகனம் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

தென்மராட்சி கைதடியில் வடிவேலு பாணியில் கடத்தப்பட்ட ஹைஏஸ் வாகனம், மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கைதடி மேற்கை சேர்ந்த ஒருவர் தனது ஹைஏஸ் வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இது பற்றி வாகனத் தரகர்களிடமும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் அவரது வீட்டுக்கு வந்த இருவர், வாகனத்தை வாங்க விரும்புவதாக குறிப்பிட்டு, வாகனத்தை பார்த்ததுடன், விலை விபரங்களையும் பேசிவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் தொலைபேசி அழைப்பேற்படுத்தி, வாகனத்தை ஓடிப்பார்ப்பதுடன், கைதடி பிள்ளையார் கோயிலுக்கு கொண்டு சென்றுவிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்தை ஓடிப்பார்க்க வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டதால், வாகன உரிமையாளர் அதற்கு சம்மதித்தார்

நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் இருவர் அந்த வீட்டிற்கு சென்றனர்.

ஒருவர் வாகனத்தை ஓடிப்பார்ப்பதற்காக வாகனத்தை இயக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். மற்றையவர், வாகன உரிமையாளருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர், கைதடி பிரதான வீதியில் கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டை வாங்கிக் கொண்டு வருவதாக குறிப்பிட்டு, புறப்பட முயன்றுள்ளார். அவருடன் தானும் வருவதாக வாகன உரிமையாளரும் புறப்பட்டுள்ளார்.

கைதடி பிரதான வீதியிலுள்ள கடையொன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர், வாகன உரிமையாளரிடம் 100 ரூபா பணத்தை கொடுத்து, மீள்நிரப்பு அட்டையொன்றை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

வாகன உரிமையாளர் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி கடைக்கு செல்ல, மோட்டார் சைக்கிளிலிருந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாகன உரிமையாளர் உடனடியாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த நிலையில், இன்று காலையில் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள்ளிருந்த ஒலிபெருக்கி அகற்றப்பட்டுள்ளதுடன், வாகன வருமான வரிப்பத்திரமும் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.