யாழ் பஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாள் வெட்டு ரவுடிகள்!! இருவர் சிறையில் அடைப்பு! ஏனையோருக்கு வலைவீச்சு

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைத்துக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிள்களில் நுழைந்து பொதுமக்கள் அச்சப்படும் வகையில், ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இரு நாள்களுக்கு முன்னர் சன நெரிசல் மிகுந்த மாலை நேரம் நடந்துள்ளது. பொலிஸார் வேடிக்கை பாத்திருக்கவே இந்தக் கும்பல் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சமூகப் பிறழ்வு நடவடிக்கைகளில் தொடர்புடைய 33 வயது நபர் ஒருவரின் பிறந்தநாளே பொதுமக்கள் அச்சப்படும் விதத்தில் பொது இடத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

மத்திய பஸ் நிலையத்துக்குள் பனர் கட்டப்பட்டு கேக் வெட்டப்பட்ட நிலையில் அதில் கலந்துகொண்ட பலர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது.

பிறந்தநாள் கொண்டாடப்பட்டவர் மீது முன்னர் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று மக்கள் கூறுகின்றனர்.

அந்தக் கூட்டத்தில் உள்ள பலர் மத்திய பஸ் நிலையத்தைச் சூழ உள்ள பழக்கடைகளில் உள்ளவர்கள் என்றும், பிறந்தநாள் கொண்டாடப்பட்டவரும் பழக்கடை நடத்தியவர் என்றும் தெரியவருகின்றது.

மத்திய பஸ் நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் நுழைந்த சுமார் 40 பேர் அங்கிருந்த மக்களை அச்சுறுத்தியதுடன், பஸ்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பஸ் நிலைத்தைச் சூழவுள்ளவர்கள் கூறுகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்கள், படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் தினமும் சட்டவிரோத ஒன்றுகூடல் நடக்கின்றது என்று தெரிவித்துள்ள நீதிபதி, பொலிஸார் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்றும் கண்டித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம், முலவையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தைச் சூழவுள்ள பழக் கடைக்களை நடத்தும் இளைஞர்கள் பலரால் பொதுமக்களும், பெண்களும் அசௌகரிங்களை எதிர்கொள்கின்றனர் என்று பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் பொலிஸார் அது தொடர்பில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றஞ்சாட்டு.

யாழ்ப்பாணம் நீதிமன்றமும், வடக்கு மாகாண ஆளுநரும் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here