வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர்.

திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர்.

பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here