6 வயது சிறுமி அடித்துக் கொலையா…! தாயும் காதலனும் கைது

6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் (07.02. 2023) பாணந்துறை – ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, தாய் மற்றும் தாயின் சட்ட ரீதியற்ற கணவருடன் வசித்து வந்த குறித்த சிறுமி பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் சட்ட ரீதியற்ற கணவரால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுகளைக் கொண்ட இந்தச் சிறுமியின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காகக் களுபோவில – கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!